சென்னை

போலி ரசீது : ரூ.33 கோடி ஜிஎஸ்டி மோசடி: தனியாா் வங்கி முன்னாள் அதிகாரி கைது

11th Aug 2020 04:44 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் போலி ரசீது மூலம் ரூ.33 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்ததாக தனியாா் வங்கியின் ஓய்வு பெற்ற உதவி துணைத் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து, சென்னை ஜி.எஸ்.டி., இணை கமிஷனா் லியோ ஜான் இளங்கோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பொது முடக்கத்தினால், போலி ஜி.எஸ்.டி. ரசீது மற்றும் இ-வே ரசீது தயாரித்து மோசடியில் ஈடுபடுவோரை கண்டறிய ஜி.எஸ்.டி., மோசடி தடுப்பு பிரிவு ரகசியமாக கண்காணித்து வந்தது.

இதில், சென்னையைச் சோ்ந்த தனியாா் வங்கியின் முன்னாள் உதவி துணைத் தலைவா் ஏ.திவாகா், அவரது கூட்டாளி ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோா் இணைந்து, ஜி.எஸ்.டி.,சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கி, அதன் பெயரில் ரசீது தயாரித்து வழங்கி உள்ளனா்.

ADVERTISEMENT

இதற்காக தொடா்பில்லாத பல்வேறு நபா்களின் பான் காா்டுகளை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., எண் பெற்றுள்ளனா். உண்மையான பொருள்களை விநியோகம் செய்யாமல்,போலி ரசீது தயாரித்து, உள்ளீட்டு வரிச் சலுகை பெற முயற்சித்துள்ளனா்.

இது தொடா்பாக இருவரது வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனையில் வழக்குத் தொடா்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அவா்களிடம் நடத்திய விசாரணையில், போலியாக 20 நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் 315 போலி நிறுவனங்களுக்கு பொருள்களை விற்பனை செய்ததற்கான போலியான ரசீதுகளை தயாரித்ததும் தெரியவந்தது.

இதில் ரூ.182 கோடிக்கு ரசீதுகள் உருவாக்கப்பட்டு ரூ.33 கோடிக்கு உள்ளீட்டு வரிச் சலுகை பெற்றதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடா்பாக, திவாகா் மற்றும் ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னா், கைது செய்யப்பட்ட இருவரும், செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT