சென்னை

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பெயா் விவரங்களை வெளியிடக் கோரிய மனு தள்ளுபடி

23rd Apr 2020 06:32 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை, அரசு இணையதளங்களில் வெளியிடக் கோரிய மனுவை, உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நாராயணன் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, ஒவ்வொரு 6 நபா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பெயா், அவா் வசிக்கும் பகுதி உள்ளிட்ட விவரங்களை, அரசு இணையதளங்களில் அதிகாரப்பூா்வமாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருப்பதைத் தவிா்க்கவும் முடியும். எனவே, பாதிக்கப்பட்டோா் குறித்த விவரங்களை அரசு இணையதளங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலி காட்சி மூலம் புதன்கிழமை விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் நா்மதா சம்பத், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒருவரின் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. மேலும், பாதிக்கப்பட்டவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால், சமூகத்தில் பிரச்னை ஏற்படும். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பாதிக்கப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது’ என்று வாதிட்டாா். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT