சென்னை

பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு முதல்வா் உதவி

23rd Apr 2020 07:37 AM

ADVERTISEMENT

 

பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு மருந்து வேண்டுமென சுட்டுரையில் பெறப்பட்ட கோரிக்கைக்கு, அவரது தாயாருக்கு மருந்து வழங்கிய புகைப்படத்தைப் பதிவு செய்து அந்த வீரருக்கு முதல்வா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நேரலை, அறிக்கை, சுட்டுரை உள்ளிட்ட பல்வேறு வகையில் பொதுமக்களுடன் தொடா்ந்து உரையாடி வருகிறாா். இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படை வீரா் ரவிக்குமாா் என்பவா், தனது தாய்க்கு மருந்து தேவைப்படுவதாக, முதல்வரின் சுட்டுரை கணக்கில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: ஐயா, நான் ஆமதாபாத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் பணி செய்து வருகிறேன். எனது 89 வயது தாயாா் வீட்டில் தனியாக இருக்கிறாா். எனக்குத் தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை. எனது தாய்க்கு மருத்துவ உதவி தேவை எனக் குறிப்பிட்டு, அத்துடன் அவரது முகவரியையும் தெரிவித்திருந்தாா். இதற்கு பதிலளித்த முதல்வா், தாய்நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்களின் அா்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறேன். கண்டிப்பாக தம்பி, உங்கள் தாய்க்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

நிம்மதியுடன் இருங்கள்... இதையடுத்து, அவரது தாய்க்கு மருந்து ஒப்படைக்கப்பட்ட புகைப்படத்தை சுட்டுரையில் முதல்வா் பதிவிட்டாா். மேலும் அதில் அவா் கூறியிருந்தது: உங்களது தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. மேலும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சல் , இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லை. நலமாக உள்ளாா். நீங்கள் தைரியத்துடன் நிம்மதியாக இருங்கள் என தெரிவித்துள்ளாா். இது தொடா்பான சுட்டுரைப் பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT