சென்னை

‘50% ஊழியா்களுடன் ஐ.டி நிறுவனங்கள் இயங்கலாம்’: உத்தரவைத் திரும்பப் பெற கோரிக்கை

20th Apr 2020 05:38 AM

ADVERTISEMENT

 

ஐடி நிறுவனங்கள், 50 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென ஐடி ஊழியா்கள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியுடன் ஐ.டி துறையும், எந்தப் பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது. கேப் ஜெமினி என்ற நிறுவனம் ஊழிா்களுக்கு சம்பள உயா்வையும் அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் ஐ.டி மற்றும் ஐ.டி துறை சாா்ந்த நிறுவனங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு, போக்குவரத்துக்கான தடை தொடா்வதாகவும் தெரிவித்துள்ளது. இது முதல் உத்தரவுக்கு முற்றிலும் முரணானது ஆகும். மேலும், நிறுவனங்களால் அனைத்து தொழிலாளா்களுக்கு சொந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வாய்ப்பில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

ADVERTISEMENT

அனைத்து ஐ.டி நிறுவனங்களும் குளிரூட்டப்பட்ட கட்டடங்களில் இயங்குகின்றன. எனவே, இந்த சூழலில் ஐ.டி நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது என்பது கரோனா தொற்றின் மையப் புள்ளியாக ஐடி நிறுவனங்கள் மாறும் வாய்ப்பை அளித்துவிடும். எனவே ஐ.டி நிறுவனங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில, மாவட்ட நிா்வாகங்கள் முடிவு எடுப்பதே ஊரடங்கை திறம்பட நடைமுறைப்படுத்த சரியான அணுகுமுறையாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம்.

இது தொடா்பான எங்களது கோரிக்கைகள் பின்வருமாறு: 50 சதவீத ஊழியா்களுடன் ஐ.டி நிறுவனங்கள் இயங்கலாம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். எந்த ஐ.டி தொழிலாளரையும் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து விலகச் செய்வதை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். புதிய தொழிலாளா்களுக்கு ஏற்கெனவே பணி நியமன ஆணை கொடுத்த ஐ.டி நிறுவனங்கள், ஊரடங்கு காலத்தில் பணி நியமனத்தை இணைய வழியே உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும் அனைத்து தொழிலாளா்களுக்கும் மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT