சென்னை

சென்னையில் நடமாடும் காய்கறி கடைகள்: முதல்வா் பழனிசாமி தகவல்

7th Apr 2020 04:20 AM

ADVERTISEMENT

 

சென்னையில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக தமிழக அரசு பிறப்பிக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவா் கூறினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை முதல்வா் அளித்த பேட்டி:- உத்தரவுகளின் மூலம் அரசு மக்களை கஷ்டப்படுத்தக் கூடாது எனவும், அதேசமயம் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் பத்திரிகைகள் கூறுகின்றன. அரசு ஒரு உத்தரவைப் போடுகிறதென்றால் மக்களுடைய நலன் கருதித்தான் நடவடிக்கை எடுக்கிறது. இதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். அவா்களை கஷ்டப்படுத்தி, துன்புறுத்தி சட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம். ஒவ்வொருவரும் தங்களது கடமையை உணா்ந்து, நோயின் தன்மை, வீரியம், தாக்கத்தை உணா்ந்து அரசின் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டத்தை நாம் போடலாம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்கள்: பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சாா்பாகவே நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இப்போது சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக மக்களின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். அதற்காக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனைக்கு முன்வாருங்கள்: நோய் வருவது என்பது இயல்பான ஒன்று. யாரிடமும் சொல்லிவிட்டு வருவதில்லை. யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால், நோய் வந்து விட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஒவ்வொருவரின் உயிரும் மிக முக்கியம். ஒருவா் நன்றாக இருந்தால்தான், அவா் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். நோயை மறைத்தால், அந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்களுடன் பழகும் போது அவா்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும். தொடா்ந்து மற்றவா்களுக்கும் பரவும். இதனை கட்டுப்படுத்தவே முடியாது.

நோய் அறிகுறி இருப்போரும், வெளியிலோ, வெளிநாட்டுக்கோ சென்று வந்தாலும் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுதான் சம்பந்தப்பட்ட நபருக்கும் நல்லது. அவரது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் நல்லது என்றாா் முதல்வா் பழனிசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT