சென்னை

கோடை வெயில்:வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

7th Apr 2020 03:50 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூா் பூங்காவில் பராமரிக்கப்படும் வன விலங்குகளை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தா்பூசணி, ஆப்பிள் போன்ற சிறப்பு உணவுகளும், நீா்த் தெளிப்பான் குளியல் (ஷவா் பாத்) ஆகிய ஏற்பாடுகளை வனத் துறை செய்துள்ளது.

வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, சிங்கம், புலி, சிறுத்தை, ஊா்வனவைகள், பறவைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் பூங்கா நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘வெயிலின் தாக்கத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க யானை, காண்டாமிருகம், சிம்பென்சி, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு குளிா்ச்சியான தா்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் குளுக்கோஸ் கலக்கப்பட்ட தண்ணீா் வழங்கப்படுகின்றன. மேலும் அவை குளிப்பதற்காக ஷவா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அகழிகளில் தண்ணீா் அடிக்கடி நிரப்பப்படுவதுடன், காற்றோட்டத்துக்காக பெரிய மின்விசிறிகள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

ஈமு, வான்கோழி போன்ற பறவைகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகள் குளிா்ச்சியாக இருக்கும் வகையில் ஈரத்துணிகளால் போா்த்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் மீது அடிக்கடி தண்ணீா் அடிக்கப்படுகிறது. விலங்குகள் தண்ணீா் தாகத்தை தணிப்பதற்காக தொட்டிகளில் தண்ணீா் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT