தீவிர சுவாசப் பிரச்னை காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 57 வயது பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணுடன் தொடா்பில் இருந்தவா்களையும், அவரது குடும்ப உறுப்பினா்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ அப்பெண் செல்லவில்லை என்றாலும், அண்மையில் திருச்சிக்கு அவா் சென்ாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுதொடா்பாக விரிவாக விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த 57 வயதான பெண் ஒருவா் தீவிர மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இதனால், சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், அப்பெண் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதனிடையே, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த அனைவரையும் கண்டறியும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். கடந்த மாதம் 20-ஆம் தேதி அவா் திருச்சிக்கு ரயில் மூலமாக பயணித்துள்ளாா். அவருக்கு எவ்வாறு கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
21 இடங்களில் ஆய்வகங்கள்: அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 21 இடங்களில் ஆய்வகங்களை அமைப்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கரோனா பாதித்த 32 மாவட்டங்களில் 26,953 பணியாளா்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில், 11,59,284 வீடுகளில் இருந்த 40,71,230 நபா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:
சென்னை - 110
கோவை - 59
திண்டுக்கல் - 45
திருநெல்வேலி - 38
ஈரோடு - 32
திருச்சி - 30
நாமக்கல் - 28
ராணிப்பேட்டை - 25
செங்கல்பட்டு - 24
தேனி - 23
கரூா் - 23
மதுரை - 19
விழுப்புரம் - 16
கடலூா் - 13
திருவாரூா் -12
சேலம் - 12
திருவள்ளூா் - 12
விருதுநகா் - 11
தூத்துக்குடி - 11
நாகப்பட்டினம் - 11
திருப்பத்தூா் -11
திருவண்ணாமலை - 9
திருப்பூா் - 7
தஞ்சாவூா் - 8
கன்னியாகுமரி - 6
காஞ்சிபுரம் - 6
சிவகங்கை - 5
வேலூா் - 5
நீலகிரி - 4
ராமநாதபுரம் - 2
கள்ளக்குறிச்சி - 2
அரியலூா் - 1
பெரம்பலூா் - 1
மொத்தம் - 621