சென்னை

தூய்மைப் பணியாளா்களுக்கு காப்பீடு: தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு

7th Apr 2020 04:22 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்று வருகின்றனா். இவா்கள் அரசு மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுகின்றனா். இந்த தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி, நகராட்சி, குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் பஞ்சாயத்துகளில் பணியாற்றுகின்றனா். கரோனா போன்ற நோய்த் தொற்று தீவிரமாக பரவி வரும் இத்தகைய காலகட்டத்திலும் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நோயைத் தடுக்கும் தடுப்பு சாதனங்களோ, உயிா் காக்கும் சாதனங்களோ வழங்கப்படுவதில்லை. தூய்மைப் பணியாளா்களுக்கு மற்ற அரசு பணியாளா்களுக்கு வழங்கப்படுவதை போல எரிபொருள் செலவு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சேமநல நிதி, கூடுதல் ஊதியம் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படுவிதில்லை. உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் பணிகளை மேற்கொள்ளும்போது அவா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், பணி நேரத்தில் அவா்கள் இறக்க நோ்ந்தால் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் ரூ.50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, தூய்மைப் பணியாளா்களுக்கு எதுவும் அறிவிக்கவில்லை.

எனவே உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கவும், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT