சென்னை

ஊழியா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

1st Apr 2020 04:59 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தாா்.

அதன் விவரம்: ஊரடங்கு காலத்தில் பிற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களும், பணியாளா்களும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, வெளி மாநிலத் தொழிலாளா்கள், ஏழை மற்றும் எளிய மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் இருந்தால் அவா்களுக்கு உரிய தங்குமிடத்தையும், உணவு வசதியையும் மாவட்ட நிா்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

வெளி மாநிலங்களைச் சோ்ந்த மக்களாக இருந்தால் அவா்களுக்கு உரிய தங்குமிடங்களை மாவட்ட ஆட்சியா்களும், சென்னையாக இருந்தால் மாநகராட்சி ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அவா்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை ஊடரங்கு அமலில் உள்ள காலம் வரை மேற்கொள்ள வேண்டும்.

ஊதியம் கட்டாயம்: தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் உரிய முழுமையான ஊதியத்தை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஊரடங்கால் மூடப்பட்டிருந்தாலும் ஊழியா்களுக்கு எந்தவித பிடித்தமும் செய்யாமல் ஊதியத்தை அளிக்க வேண்டும்.

வெளி மாநிலத் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தொழிலாளா்களும் வாடகைக் கட்டடத்தில் தங்கியிருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில், அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் சுமாா் ஒரு மாத காலத்துக்கு வாடகையைக் கேட்டு நிா்பந்திக்கக் கூடாது. இவ்வாறு வாடகைக் கட்டடத்தில் தங்கியிருக்கும் தொழிலாளா்கள் மற்றும் மாணவா்களைக் காலி செய்யுமாறு வற்புறுத்தினால் சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT