சமூக வலைதள குற்றங்கள்: விரைவில் புதிய சட்டம் என மத்திய அரசு தகவல்

சமூக வலைதளங்களைக் கண்காணித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்

சமூக வலைதளங்களைக் கண்காணித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்டனி கிளமென்ட் ரூபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தற்காலத்தில் தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் முகநூல், சுட்டுரை, கட்செவி, கூகுள் மின்னஞ்சல், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் அதனை உபயோகப்படுத்தும் நபர்களின் ஆதார் அட்டை எண் கண்டிப்பாக இணைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் கொண்ட  அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை அமைத்து கொடுத்துவிட்டு, அதில் பரவும் தவறான தகவல்கள், வதந்திகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என கட்செவி நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. அந்த நிறுவனத்துக்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இந்தியாவுக்குள் வரும்போது அந்த நிறுவனம் இந்திய நாட்டின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். காட்சி ஊடகங்களைக் கண்காணிக்கவும் அவற்றை கட்டுப்படுத்தவும் தனியாக அமைப்புகள் இருப்பதைப் போல சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்புகளும் இல்லை என கருத்து தெரிவித்தனர். 

அப்போது மத்திய அரசு தரப்பில், இந்தியாவில் சமூக வலைதளங்களைக் கண்காணித்து , அதன்மூலம் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. அதற்கான அரசின் இறுதி முடிவை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது,தமிழக அரசு தரப்பில், சமூக வலைதளங்களுக்கான குறைதீர் ஆணையம் மற்றும் நிர்வாகியை நியமிக்கும் விவகாரத்தில் முகநூல், சுட்டுரை நிறுவனங்கள் தமிழக அரசுக்கு போதுமான ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. ஆனால் கட்செவி நிறுவனம் எந்த ஒத்துழைப்பும்  வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com