இளைஞர்களால் தூர்வாரப்பட்ட: மண− சடையன்குப்பம் ஏரி!

சென்னை மாநகராட்சி மணலி அருகே அமைந்துள்ள சடையன்குப்பம் ஏரியை, உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தூர்வாரி சீரமைத்துள்ளன.  
இளைஞர்களால் தூர்வாரப்பட்ட: மண− சடையன்குப்பம் ஏரி!

சென்னை மாநகராட்சி மணலி அருகே அமைந்துள்ள சடையன்குப்பம் ஏரியை, உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தூர்வாரி சீரமைத்துள்ளன.  

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தையும் சீரமைத்து மழை நீர் மற்றும் புழல் ஏரியின் உபரி நீரைத் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 98 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சடையன்குப்பம் ஏரி அமைந்துள்ளது.   இதன் பெரும் பகுதி பல்வேறு தரப்பினராலும் நீண்டகாலத்திற்கு முன்பே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் தற்போது ஏரியின் பரப்பளவு பெருமளவு சுருங்கி விட்டது. காலப்போக்கில் கால்வாயிலும் நீர் வரத்து நின்று போனதால் ஏரியும் தூர்ந்து போய்விட்டது.  

இந்நிலையில், கனமழையின்போது புழல் ஏரி திறக்கப்பட்டால் சடையன்குப்பம் கிராமமே நீரில் தத்தளிப்பதும், கிராம மக்கள் அனைவரையும் படகுகள் மூலம் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.  மேலும், எண்ணூர் முகத்துவாரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் கடல் நீர் உள்புகுந்து குடிநீரில் உப்புத் தன்மை அதிகரித்து விட்டது. மேலும், வெள்ளப் பெருக்கின்போது அருகில் அமைந்துள்ள ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் இங்குள்ள நீர்நிலைப் பகுதிகளில் பரவியுள்ளன.  இதன் பாதிப்பு மேற்கு திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரையையும் பாழ்படுத்தும் நிலை உள்ளது. இதனையடுத்து, சடையன்குப்பம் ஏரி உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை மீட்டும், காலியாக உள்ள சதுப்பு நிலங்களைச் சீர்படுத்தி புதிய குட்டைகளை அமைக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு வெள்ளப்பெருக்கின்போது இப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் பாதுகாக்க முடியும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.  இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து சடையன்குப்பம் ஏரியை இருபதே நாள்களில் தூர்வாரி சீரமைத்துள்ளன. 

ஏரியை தூர்வாரியது குறித்து ஹெபிடேட் ஃபார் ஹூமானிடி அமைப்பின் இயக்குநர் சாமுவேல் பீட்டர், கோவை மக்கள் அறக்கட்டளை நிறுவநர் ஜே.பி.சண்முகம் ஆகியோர் கூறியது: முதல்கட்டமாக சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 3 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. 

தூர்வாரிய மண், கரையில் கொட்டப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. பலப்படுத்தப்பட்ட கரைகளில் சுமார் ஆயிரம் மரக்கன்று வகைகளை நடவு செய்து வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணி  தொடங்கியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் உடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், மழைநீரை முழுமையாகச் சேகரிக்க முடியும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படும். மேலும், ஏரியின் இதர பகுதியை தூர்வாரத் திட்டமிட்டுள்ளோம். இதில் மேலும் சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன  என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com