சென்னை

செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் மூலம் ஆரோக்கியத்தைப் பேணும் திட்டம் அறிமுகம்

22nd Sep 2019 04:27 AM

ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிறப்பு செயல் திட்டத்தை (ப்ரோ ஹெல்த்) அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமுன் காப்பதற்கும், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அத்திட்டத்துக்கான தொடக்க விழா சென்னையில் அண்மையில்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு நோய் வந்துவிட்டால், அதனை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்துதான் அனைவரும் சிந்திக்கிறோம். அதேவேளையில், நோய்களே வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்பது குறித்து நம்மில் பலர் ஆலோசிப்பதில்லை. இதயப் பாதிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் முழு உடல் பரிசோதனை வசதிகள் அதிக அளவில் இல்லை. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அதுதொடர்பான விழிப்புணர்வும், மருத்துவ வசதிகளும் அதிகரித்து விட்டன. இருப்பினும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். ஆனால், இளம் வயதினரும், பதின் பருவத்தினரும் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் தொற்றா நோய்களின் பிடியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.
முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள "ப்ரோ ஹெல்த்' திட்டம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும், பெரும்பாலானோர் அதனைக் கடைப்பிடிப்பதில்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒருவருக்கு எத்தகைய நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளன என்பது குறித்த தகவல்களை கணினி மூலம் பெறுவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும். அதாவது, ஒரு நபரின் உடல் நிலை, அவரது குடும்பத்தினருக்கு உள்ள நோய்கள், அவரது வயது, எடை உள்ளிட்ட தகவல்களை "ப்ரோ ஹெல்த்' தளத்தில் பதிவேற்றம் செய்தால், எந்தெந்த பரிசோதனைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்,  என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்,  எந்தெந்த வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்பன போன்ற விவரங்களைப் பெற முடியும். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT