சென்னை காவல்துறை சார்பில் நாளை சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சனிக்கிழமை (செப்.21) 4 இடங்களில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.


சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சனிக்கிழமை (செப்.21) 4 இடங்களில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி, பெருநகர காவல் துறை சார்பில் 4 மண்டலங்களிலும், இம் மாதம் 21-ஆம் தேதி காலை 11 மணியளவில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதன்படி, வடக்கு மண்டலத்துக்கு புது வண்ணாரப்பேட்டை சமுதாய கூடத்தில் நடைபெறும் முகாமுக்கு இணை ஆணையர் கபில்குமார் சி.சாரட்கர் தலைமை வகிப்பார். மேற்கு மண்டலத்துக்கு திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் உள்ள மங்கலம் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமுக்கு இணை ஆணையர் பி.விஜயகுமாரி தலைமை வகிப்பார்.
இதேபோல, தெற்கு மண்டலத்துக்கு பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் முகாமுக்கு இணை ஆணையர் சி.மகேஸ்வரி தலைமை வகிப்பார். கிழக்கு மண்டலத்துக்கு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் நடைபெறும் முகாமுக்கு இணை ஆணையர் ஆர்.சுதாகர் தலைமை வகிப்பார்.
ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு கிடைக்கப் பெறாத பொதுமக்கள், இந்த முகாமில் பங்கேற்று தங்களது பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போக்குவரத்து குறை தீர்க்கும் முகாம்: இதேபோல, சென்னை பெருநகர காவல்துறையில் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னையில் போக்குவரத்து காவல்துறை தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், போக்குவரத்து சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் இம் மாதம் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு இரு இடங்களில் நடைபெறுகிறது.
இதில் பூக்கடை காவல் நிலைய வளாகத்தில் நடைபெறும் முகாமுக்கு போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையர் எம்.வி.ஜெயகௌரியும், தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீஹாலில் நடைபெறும் முகாமுக்கு போக்குவரத்துப் பிரிவு தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசனும் தலைமை வகிப்பார்கள்.
இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், காவல்துறை துரித நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com