கன்டெய்னர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள்: கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்பு

நான்காவது நாளாக நீடித்து வரும்  கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு ஸ்தம்பித்துள்ளது.
கன்டெய்னர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள்: கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்பு


நான்காவது நாளாக நீடித்து வரும்  கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு ஸ்தம்பித்துள்ளது.  இந்நிலையில் இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வேலை நிறுத்தம் பின்னணி:   மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் விதிகளின்படி ஒவ்வொரு லாரியும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும்.  ஆனால் இந்த விதியை முறையாக அமல்படுத்துவது இல்லை என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் இவ்விதியைச் செயல்படுத்துவதில் சாலை போக்குவரத்து அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.  
 இதனையடுத்து கடந்த ஆக.5,  2013-இல் அனைத்து மாநில அரசுகளும் இதனை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.    இந்நிலையில், செப்.1 முதல் குறிப்பிட்ட எடைகொண்ட பாரம் மட்டுமே ஏற்றிச் செல்வது, ஒரு லாரியில் ஒரு கன்டெய்னரை மட்டுமே ஏற்றுவது, அதற்குரிய வாடகையை உயர்த்தித் தரக் கோருவது   இல்லையெனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்  அறிவித்திருந்தனர். ஆனால் துறைமுக நிர்வாகங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள், சரக்குப் பெட்டக நிலையங்கள் இது குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திங்கள்கிழமை முதல் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு கன்டெய்னர் லாரிகளை இயக்க மறுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மூன்றாவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தம் தொடர்வதால் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு முடங்கிவிட்டது.  இந்நிலையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் யார் தலையிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 
வேலைநிறுத்தம் நியாயமற்றது:  வேலை நிறுத்தம் குறித்து சென்னை எண்ணூர் ஸ்ட்ரீமர் ஏஜண்ட்ஸ் சங்கத் தலைவர் லீலாதரன்  கூறியது: 
உலகலவில் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இத்துறை சார்ந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.  எங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே நாங்கள் போராடி வருகிறோம். 
இந்நேரத்தில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது நியாயமற்றது.   எனவே வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்றார் லீலாதரன். 
ஒரு லாரிக்கு ஒரு கன்டெய்னர் சாத்தியமற்றது: வேலை நிறுத்தம் குறித்து சரக்குப் பெட்டக நிலைய உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பத்மநாபன் கூறியது: 
மத்திய அரசு மேற்கொண்டு வரும் எளிய நடைமுறைகள் காரணமாக  ஏற்றுமதி, இறக்குமதியாகும் சுமார் 70 சதவீத சரக்குகளை சரக்குப் பெட்டக நிலையங்களுக்குக் கொண்டு செல்லாமலே நேரடியாக தங்களது கிடங்குகளுக்கோ, துறைமுகங்களுக்கோ எடுத்துச் செல்ல முடியும்.  இதனால் சரக்குப் பெட்டக நிலையங்களில் பெரும்பாலானவை கடும் சிக்கலில் உள்ளன.  இதே நிலை தொடர்ந்தால் இத்தொழிலை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. மும்பையில் வழங்கப்படும் வாடகையைவிட இருமடங்கு அதிகமாக வழங்கி வருகிறோம். 
இந்நிலையில், மேலும் வாடகையை உயர்த்துவது என்பது இயலாது. மேலும் அதிக பாரம் கூடாது என வலியுறுத்தி வரும் லாரி உரிமையாளர்கள் அதே பாரத்தில் இரண்டு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்று கூறுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றார் பத்மநாபன்.
 இது குறித்து ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், சுங்க இல்ல தரகர்கள் கூறியது: வேலைநிறுத்தம் நான்காவது நாளாக நீடிக்கிறது. இதனையடுத்து ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு ஸ்தம்பித்துள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து வியாழக்கிழமை முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் கன்டெய்னர் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்துள்ளது.  
இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.   வழக்கமாக இதுபோன்ற வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது சென்னைத் துறைமுகத் தலைவர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம். ஆனால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செவ்வாய்க்கிழமை தண்டையார்பேட்டை தாசில்தார், காவல் உதவி ஆணையர் முன்னிலையில் இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். 
ஆனால், தொழில் தாவாக்கள் குறித்து காவல், வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை  என இருதரப்பினரும் தெரிவித்ததையடுத்து முதல்கட்டப் பேச்சுவார்த்தையே தோல்வியில் முடிந்துவிட்டது.   
மேலும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.  எனவே இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com