சென்னை

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு: மாநகராட்சி பொறியாளர்கள் மீது வழக்கு

17th Sep 2019 04:28 AM

ADVERTISEMENT

சென்னை முகலிவாக்கத்தில் உரிய பாதுகாப்பின்றி பராமரிக்கப்பட்ட மின் கம்பியை மிதித்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக பெருநகர மாநகராட்சி பொறியாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சேர்ந்த செந்தில், வனிதா தம்பதியின் மூத்த மகன் தீனா(14). எம்.ஜி.ஆர்.நகர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தீனாவின் தந்தை செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். 
 முகலிவாக்கத்தில் மாநகராட்சி சார்பில் தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாத நிலையில், பள்ளங்கள் தற்காலிகமாக மணல் நிரப்பி மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மழை பெய்ததால் மணல் சரிந்து புதைந்து கிடந்த மின்கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. மழை நீரும் அங்கு தேங்கி இருந்தது. அவ்வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற தீனா வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து தீனாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டலப் பொறியாளர் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT