சென்னை

தனியார் ரயில் சேவை: தில்லி-லக்னௌ இடையே முதல் சேவை அக்டோபரில் தொடங்க திட்டம்

17th Sep 2019 04:43 AM | எம். வேல்சங்கர்

ADVERTISEMENT

 

பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, தில்லி-லக்னெள இடையே தனியார் ரயில் சேவை வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்  சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதைத்தொடர்ந்து, மும்பை-ஆமதாபாத் இடையே தனியார்  ரயில் டிசம்பரில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தனியார் ரயில்களை இயக்குவது குறித்தும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆய்வு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தனியார் ரயில் இயக்க ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2.30 கோடி பேர் பயணம்: நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன.  இந்த ரயில்களில் தினசரி 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 

ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து கடந்த 2014-ஆம் ஆண்டு விவேக் தேவ்ராய் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 2015-ஆம் ஆண்டு 300 பக்க அறிக்கையை அளித்து, பல்வேறு முக்கிய பரிந்துரைகளையும் தெரிவித்தது. அதன்படி,  மண்டல பொது மேலாளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரம் அளித்தல், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை,  பயணிகள் ரயிலை தனியார் இயக்குவது, வருவாயைப் பெருக்க ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை  ரயில்வே துறை ஏற்று செயல்படுத்தி வருகிறது. 

ADVERTISEMENT

வருவாயைப் பெருக்க திட்டம்: இதன் தொடர்ச்சியாக 100  நாள் செயல் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியது. இதில்,  பயணிகள் ரயில்களை தனியார் இயக்குவதில் ரயில்வே அமைச்சகம் ஆர்வம் காட்ட தொடங்கியது. ரயில்வே துறையின் வருவாயைப் பெருக்கவும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், முக்கிய வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு,  முதல்கட்டமாக வட மாநிலங்களில்  2 தனியார் ரயில்களை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.டி) வாயிலாக இயக்க ரயில்வே அமைச்சகம்  முடிவு செய்தது. அதன்படி,  தனியார் ரயில்கள் இயக்கவுள்ள வாய்ப்புகள், வழித்தடம், கட்டண விவரம், பயணிகளுக்கான சேவைகள், ரயில்வேக்கு வருவாய் ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த ஐ.ஆர்.சி.டிசி.  இறுதி அறிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பு ரயில்வே வாரியத்திடம் அளித்தது. இதை ஏற்று, தனியார் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தில்லி-லக்னெள இடையே ரயில்: முதல் கட்டமாக, தில்லி-லக்னெள இடையே தனியார் ரயில் அக்டோபரில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சோதனை ஓட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த ரயில் தேஜஸ் ரயிலாக இயக்கப்படவுள்ளது. தில்லி-லக்னெள இடையே முதல் தேஜஸ் ரயில் செவ்வாய்க்கிழமை நீங்கலாக வாரத்தில் ஆறு நாள்கள் ஓடும். கெய்சாபாத் மற்றும் கான்பூரில்  நிற்கும். இரண்டாவது ரயில் மும்பை-ஆமதாபாத் இடையே வாரத்தில் ஆறு நாள்கள் ஓடும் என்று தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. 
இரண்டு ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ரயில்கள் இயக்க அனுமதி வழங்க உத்தேசித்து இருக்கிறது. இந்த தனியார் ரயில்களுக்கு பயணச்சீட்டு பரிசோதகர்கள் கிடையாது. ரயில் நிலையங்களில் உள்ள தனி நுழைவாயில் சோதனை மூலம் பயணிகள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். 

பல்வேறு வசதிகள்: 18 பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்களில் தொலைக்காட்சிப் பெட்டி, வை- பை வசதி, அழைப்பு சுவிட்ச், காபி மிஷின், வசதியான இருக்கைகள் என்று பல வசதிகள் இடம் பெற இருக்கின்றன. இருக்கை எண்ணிக்கையை விட கூடுதல் சீட் வழங்கப்பட மாட்டாது. முன்பதிவு செய்து பயணம் உறுதியானவர்கள் மட்டுமே பயணிக்கலாம். 

தென் மாநிலங்களில் ரயில்கள் இயக்க ஆய்வு: இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரிகள் கூறியது: முதல் கட்டமாக, 2 தனியார் ரயில்கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது 2 வழித்தடங்களைத் தேர்வு செய்து, வாரியத்திடம் அளித்தோம். அந்த வகையில், முதல்கட்டமாக தில்லி-லக்னெள, மும்பை-ஆமதாபாத் இடையே ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தில்லி-லக்னெள இடையே தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அக்டோபரில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. 

மும்பை-ஆமதாபாத் இடையே தனியார் ரயில் சேவை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களில் தனியார் ரயில் இயக்குவது குறித்து ஆய்வு செய்து  வருகிறோம். இருப்பினும், தற்போதைக்கு தனியார் ரயில்கள் இயக்க எண்ணம் இல்லை என்றனர்.

தனியார் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு: இதற்கிடையில், தனியார் ரயில்களை இயக்கும் முடிவுக்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது:  இந்தத் தனியார் ரயில்கள் அதிக பயணத் தேவை உள்ள நல்ல வருவாய் தரும் முக்கிய வழித்தடங்களில் சாமானியர்கள் பயணம் செய்ய இயலாத உயர் கட்டண சொகுசு ரயில்களாக இயக்கப்பட இருக்கின்றன. 
மேலும், சமூக நலன்களை கருத்தில் கொண்டு வழங்கப்படும் மூத்த குடிமக்கள், நோயாளிகளின் பயணச்சலுகை நிராகரிக்கப்படவுள்ளன. இந்த ரயில் லாபத்தை சுட்டிகாட்டி, வரும் காலங்களில் இந்த ரயில்களோடு மற்ற முக்கிய பாதைகளின் ரயில்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.  
தனியார் ரயில்களால் சமூக நலன்களை பாதிக்கும். ரயில்வே கட்டமைப்புகளை பலவீனப்படுத்தும். ஊழியர்கள் நலன்களுக்கு எதிரானது. திட்டத்தை கைவிட வலியுறுத்தி (செப். 18) புதன்கிழமை  அனைத்து தெற்கு ரயில்வே கோட்டங்கள் முன்பாகவும் எங்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT