சென்னையைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநரை கொலை செய்து சடலத்தை மதுரை மாவட்டம், மேலூர் அருகே கால்வாயில் வீசிவிட்டு, காரைக் கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலூர் அருகே சாவரப்பட்டி விலக்கில் உள்ள சிங்கம்புணரி நீட்டிப்புக் கால்வாயில் சடலம் ஒன்று கிடப்பதாக கொட்டாம்பட்டி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் சடலத்தை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தவர் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னை போரூரைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் என்பது தெரிந்தது. மேலும், விசாரணையில், சென்னை - போரூர் காவல்நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதி குற்றாலம் செல்வதாகக் காரை எடுத்துச் சென்ற ஓட்டுநரைக் காணவில்லை என கடந்த 11-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், இறந்து கிடந்த கார் ஓட்டுநர், ராமநாதபுரம் மாவட்டம், ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் நாகநாதன் (51) என்பதும், இவர் சென்னை, போரூரில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. கடந்த 5-ஆம் தேதி ஒரு பெண்ணும், இரு இளைஞர்களும் வாடகைக்கு காரை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில நாகநாதன் கொலை செய்யப்பட்டு, மேலூர் அருகே கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் ஏ.நடேசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து, கடத்தப்பட்ட காரையும், கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.