சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ. 6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க பேரூரில் ரூ.6,078 கோடியில்  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என முதல்வர்


பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க பேரூரில் ரூ.6,078 கோடியில்  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் பேசியதாவது:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் என்ன என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது கருணாநிதி கடும் விமர்சனம் செய்தபோதும், அந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் செயல்படுத்தினார். அதன்பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்தத் திட்டத்தை செம்மைப்படுத்தினார். அதை நாங்களும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
இந்தத் திட்டத்தை கொச்சைப்படுத்திய கருணாநிதியே, அந்தத் திட்டம் சிறந்த திட்டம் என அதில் முட்டையைச் சேர்த்தார்.
அதுபோல, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு சிறந்த திட்டங்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இந்தத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2011 முதல் 2019 வரை 11 லட்சத்து 46,000 பெண்களுக்கு 5,525 கிலோ தங்கம், ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என ரூ.3,955கோடி வழங்கப்பட்டுள்ளது.
அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3 லட்சத்து 33,000 மகளிர் பதிவு செய்துள்ளனர். 2017 - 2018 ஆம் ஆண்டில் 1லட்சத்து 40,000 மகளிருக்கு மானியமாக ரூ.338 கோடி வழங்கப்பட்டுள்ளது. 
விரைவில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்: அதே போல வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிதி உதவியாக ரூ.2000 வழங்க வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி முடிந்தவுடன் விரைவில் ரூ.2000 வழங்கப்படும். 
தடையற்ற குடிநீர் விநியோகம்: நெமிலியில் ரூ.1,259 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த திட்டம் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். பருவ மழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பேரூரில் ரூ.6,078 கோடி மதிப்பீட்டில்  கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அந்த தொலை நோக்குத் திட்டமும் ஒப்புதல் கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும். 
சென்னையில் புதிய பாலங்கள்: சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சென்னை மாநகராட்சியில் ரூ.90 கோடி மதிப்பில் அடையாற்றின் குறுக்கே நெசப்பாக்கம், நந்தம்பாக்கத்தை இணைக்கும் பாலம் கட்டும் பணியும் நடைபெறவுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ரூ.39 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியும் நடைபெறவுள்ளது. மேலும், சென்னை மாநகரத்தில் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பாலம் கட்டும் பணியும் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், மத்திய கைலாஸ், பேசின் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசலே இல்லாத நகரமாக சென்னை மாநகரம் உருவாக்கப்படும். 
வெளிநாடு பயணம் எதற்கு?: நான் வெளிநாடு செல்வதை ஸ்டாலின் குறை கூறுகிறார். தென் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் எல்லாம் அடிக்கடி வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கும்போது, நாம் இங்கே இருந்தால் எந்த முதலீடும் தமிழகத்துக்கு வராது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முடியாமல் போகும் என்பதற்காகத்தான் நாங்களும் வெளிநாடு சென்று வந்தோம். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதால் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இங்கே வருகிறார்கள். இதன் மூலம் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என எந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும். விருகம்பாக்கம் தொகுதி மக்கள் வைத்த கோரிக்கைகளான, குடிசை மாற்று வாரியத்தில் கிரயப் பத்திரம் வழங்க வேண்டுமென்பதையும், பல இடங்களில்  பட்டா வழங்க வேண்டுமென்பதையும் அரசு ஆராய்ந்து, உரிய முடிவு எடுக்கும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com