பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்ற புதிய படிப்பு அமல்படுத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்ற இனி எம்.இ மற்றும் எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது, மாறாக புதிதாக
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்ற இனி எம்.இ மற்றும் எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது, மாறாக புதிதாக அமல்படுத்தப்படவுள்ள ஓராண்டு ஆன்லைன் படிப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். 

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் சஹஸ்ரபுதே பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய கல்வி கொள்கையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பலர் கூறுகிறார்கள். 

வசதி படைத்த மாணவர்கள் அதிக கல்வி கட்டணத்தை கட்டுவதில் எந்த பிரச்னையும் இல்லை. அதை வைத்து இந்த 25 சதவீத மாணவர்களின் கல்விக்கு உதவ முடியும். 

நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வியில் ஒட்டுமொத்த வருகைப் பதிவு விகிதாசாரம் 25 சதவீதம் 27 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. தொலைதூரக்கல்வி, இணையதள வழிக்கல்வி போன்ற பல்வேறு முறைகள் மூலம் இன்னும் 5 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.  

புதிய கண்டுபிடிப்புகளுக்கு குழுக்கள்: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான குழுக்களாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த பாடத்திட்டங்கள் மாணவர்கள் சுயமாக சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்து இருக்க வேண்டும். 

அண்மையில் வெளியான ஒரு ஆய்வில் உலகின் சிறந்த 300 கல்வி நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த ஒரு கல்லூரிகள் கூட இடம்பெறாதது, துரதிருஷ்டவசமானது. அந்த ஆய்வில் சில விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. அவை நமக்கு பொருந்தாத விதிகள். அவற்றை கடைப்பிடிப்பது சிரமம்.

300 சிறந்த கல்விநிறுவனங்களுடன் இந்திய கல்வி நிறுவனங்களை ஒப்பிடும்போது, பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை நாம் சமர்ப்பித்து தான் இருக்கிறோம். எனவே இந்தியாவின் உயர்கல்வி சிறப்பாக தான் உள்ளது.

ஆன்லைன் படிப்பு அறிமுகம்: இதுவரை அரசு,  அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக இருப்பதற்கு எம்.டெக். படித்து இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனிமேல் அது போதாது.  
8 Module Course என்ற ஓராண்டு புதிய ஆன்லைன் படிப்பு அமல்படுத்தப்படவுள்ளது.  அதைப் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் பேராசிரியராக பணியில் சேர்ந்து பணியாற்ற முடியும். இது கட்டாயமாக்கப்படுகிறது.  ஏற்கெனவே பணியில் இருக்கும் பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறும்போது, இந்தத் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். 

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய படிப்புகளை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரே படிப்பான பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்ட்டிபிசியல் இன்டெலிசன்ஸ் அன்ட் டேடா சயின்ஸ்) படிப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com