சென்னையில் விதிமீறல் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள்

சென்னையில் விதிமீறல் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னை காவல் துறையுடன் இணைந்து தனி செல்லிடப்பேசி எண்ணுடன்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னை காவல் துறையுடன் இணைந்து தனி செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய மூன்று நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

சென்னை பள்ளிக்கரணை 200 அடிச் சாலையில் அரசியல் பிரமுகர் சார்பில் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்ததால் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்தார். இந்தப் பிரச்னை பலத்த கண்டனத்தை எழுப்பியது. உயர் நீதிமன்றம் கண்டித்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்தனர். 

இந்தநிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுவதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விளம்பரப் பதாகைகள் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தடை ஆணை செயல்பாட்டில் உள்ள நிலையில் விளம்பரப் பதாகைகள் அமைப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். 

விதிமுறைகளை மீறி  விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு விளம்பரப் பதாகைக்கு ரூ.5,000 வீதம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இதுவரை 3,964 பேனர்கள் அகற்றம்:  சட்டத்திற்குப் புறம்பாக அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளைக் கண்காணித்து உடனடியாக அகற்றி அமைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே மண்டல அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி, இதுவரை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 964 விளம்பரப் பதாகைகள் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

மேலும், அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளைக் கண்காணித்து அகற்ற ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியும் சென்னை காவல் துறையும் இணைந்து ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் தனி செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய மூன்று ரோந்து வாகனங்கள் சனிக்கிழமை முதல் செயல்படுத்தப்படவுள்ளன. 

செல்லிடப்பேசி எண்கள் விவரம்:  எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் குறித்து மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்துக்கு  உள்பட்ட பகுதிகளில் 94451 90205 என்ற எண்ணுக்கும்,  மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரத்துக்கு  உள்பட்ட பகுதிகளில் 94451 90698 என்ற எண்ணுக்கும்  மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 94451 94802 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு விளம்பர பதாகைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.
இதையடுத்து புகார் கிடைத்தவுடன், ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்று விளம்பரப் பதாகைகளைப் புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்து விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்த பின்னர் அவற்றை அகற்றி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்வர் என அதில் கூறப்பட்டுள்ளது. 

அரை மணி நேரத்தில் பேனர் அகற்றம்

சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள சுரங்கப்பாதையின் கூரைமீது ஆபத்தான முறையில் தனியார் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.  வாகன ஓட்டிகள் மீது சரிந்து விழும் நிலையில் அமைக்கப்பட்டிருந்த இந்த பேனர் குறித்து 1 முதல் 5 வரை உள்ள மண்டலங்களுக்காக அளிக்கப்பட்ட புகார் எண்ணில் சனிக்கிழமை மாலை ஒருவர் புகார் செய்தார். 

இதையடுத்து அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 10 நிமிஷங்கள் கழித்து புகார் கூறியதை உறுதிப்படுத்த ஒரு அலுவலர் புகார் தெரிவித்தவரிடம் பேசினார்.  பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து போலீஸார் வந்தனர். அடுத்த 20 நிமிஷங்களில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேனரை அகற்றினர்.  பேனர் அகற்றப்பட்டது குறித்து புகாரளித்த நபருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com