சென்னை

தலைமை நீதிபதி இடமாற்றம்: வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

10th Sep 2019 04:58 AM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ இடமாற்ற உத்தரவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உச்சநீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்யக் கோரிய தலைமை நீதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் முன் மூத்த வழக்குரைஞர் ஆர்.வைகை தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின், தலைமை நீதிபதியை மேகாலயா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்திருப்பது அவரை அவமதிக்கும் செயல் எனக்கூறி,  கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், விஜயகுமார், நாகசைலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT