வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சென்னை குடிநீர்த் திட்டத்துக்கான புதிய நீர்த்தேக்கம்: வடகிழக்குப் பருவ மழைக்கு முன் திறக்க திட்டம்

DIN | Published: 10th September 2019 04:55 AM
தேர்வாய் கண்டிகை - கண்ணங்கோட்டையில் உள்ள 2 ஏரிகளையும் இணைத்து அமைக்கப்பட்டு வரும் புதிய நீர்த் தேக்கம்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை - கண்ணங்கோட்டையில் உள்ள 2 ஏரிகளையும் இணைத்து புதிய நீர்த் தேக்கம் அமைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்து வட கிழக்குப் பருவமழைக்கு முன்பாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர மாநகராட்சிப் பகுதிகளுக்கு தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இருப்பினும் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கும் குடிநீர் சில நேரங்களில் போதுமானதாக இல்லை.  
இந்தக் குறையை போக்கும் வகையில், சென்னை குடிநீர் திட்டத்துக்கு பயன்படும் வகையில் 5-ஆவது நீர்த்தேக்கத்தை உருவாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டார். 
 ரூ.330 கோடி மதிப்பில்: 
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய்கண்டிகை பெரிய ஏரியையும், அதன் அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து கூடுதலாக நிலத்தை அதில் சேர்த்து 1,495.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடி மதிப்பீட்டில், ஆயிரம் மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
 தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வரும்  அக்டோபர்,  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை இந்த நீர்த்தேக்கத்தில் தேக்கிவைப்பதற்கான பணியை விரைவுபடுத்தி நீர்த் தேக்கத்தைத் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
கூடுதல் நிலங்கள் இணைப்பு:  இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:  சென்னைக்கு மாதந்தோறும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஏற்கெனவே உள்ள நீர்த்தேக்கங்களின் மூலம் 11 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுகிறது. போதிய மழை பெய்யாததால் நீர் போதுமானதாக இருக்காது. எனவே தான் கூடுதலாக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுகின்றன. 
கண்ணங்கோட்டை, தேர்வாய்கண்டிகை பகுதியைத் தேர்வு செய்து அங்கு ஏற்கெனவே இருக்கும் ஏரியின் பரப்பளவுடன் கூடுதலாக 600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 600 ஏக்கர் பட்டா நிலம், 40 ஏக்கர் வனப்பகுதி சேர்க்கப்பட்டன.  இவற்றை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டு நீர்த்தேக்கத்துக்கான நிலத்தை ஆழப்படுத்தி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. 
இந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழை நீரை இதில் தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விரைவில் நீர்த்தேக்கம் திறக்கப்பட உள்ளது. 
 1.5 டிஎம்சி வரை தேக்க முடியும்:  இந்த பணிகளுக்கு இடையில் அப்பகுதியில் நீரை சுத்திகரிக்கும் நிலையம், நீரேற்று நிலையம் போன்றவற்றை சென்னை குடிநீர் வாரியம் அமைத்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்ய தொடங்கும். இதில் 1.5 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமிக்க முடியும்.  அக்டோபர் மாதத்தில் மழை பெய்யாவிட்டாலும்  கூட, சென்னை மக்களுக்கு ஒன்றரை மாதத்துக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும்.
சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீரையும், பருவ காலங்களில் பெய்யும் மழைநீரையும் கூடுதலாக தேக்கி வைக்க, இந்த நீர்த்தேக்கம் பயன்படும். இதுதவிர மேலும் 2 நீர்த் தேக்கங்களை அமைத்தால், சென்னை மாநகரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாத பகுதியாக மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கன்டெய்னர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடரும் சிக்கல்கள்: கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்பு
சென்னை ஐஐடி ஆராய்ச்சி கட்டமைப்புகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
காலமானார் த. சுப்பிரமணியன்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்  நீக்கப்பட்ட விவகாரம்: பதிலளிக்க உத்தரவு