சென்னை

விநாயகர் சிலைகள் கரைப்பு: தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள்

4th Sep 2019 04:33 AM

ADVERTISEMENT


சென்னை நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அடுத்து வரும் நாள்களில் கரைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மருத்துவ உதவிக்காக கடற்கரை பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட உள்ளன.
அதேபோன்று ஆம்புலன்ஸ் வாகனங்களும் அவசர உதவிக்காக அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னையில் 2,602  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த சிலைகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை (செப். 5), சனிக்கிழமை (செப்.7), ஞாயிற்றுக்கிழமை (செப்.8) ஆகிய நாள்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், திருவொற்றியூரில் இரு பகுதிகள் என மொத்தம் 6 இடங்களில் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அப்பகுதிகளில் தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் பகுதிகளில் மருத்துவ ரீதியான அவசர உதவிகள் தேவைப்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவக் குழுக்களையும் அனுப்புவோம் என்று தெரிவித்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT