சென்னை

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு:  பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

4th Sep 2019 04:27 AM

ADVERTISEMENT


மணலியில் மழை நீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியதைக்கண்டித்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 20-ஆவது வார்டுக்கு உட்பட்ட புதிய எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில்  பெய்யும் மழைநீர் செல்லும் வகையில் தெருக்களில் மழைநீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.  இந்தக் கால்வாயில்  மழைநீர் மட்டுமல்லாமல் அப்பகுதியைக் குடியிருப்புகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நீரையும் திறந்துவிடுகின்றனர்.  மேலும், உணவு விடுதிகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரும் மழைநீர் கால்வாயில் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.  மேலும், மழைநீர் கால்வாய் முறையான நீர்மட்டத்துடன் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக, மழைநீர் கால்வாய் முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது.   தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் தெருக்களில் தேங்கும் மழைநீர் ஏற்கனவே கழிவு நீர் தேங்கியுள்ள மழைநீர் கால்வாயில் கலந்து, அடைப்பு காரணமாக மழைநீரும், கழிவு நீரும் கலந்து அப்பகுதி முழுதும்  துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது.   இந்த அவல நிலையைக் கண்டித்து பொதுமக்கள்  மணலி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சீரமைக்கக் கோரிக்கை:    இப்பிரச்னை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியது, மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலக்கும் பிரச்னை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவு நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் நடக்க முடியுவில்லை. எனவேதான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  இப்பிரச்னை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.  மேலும்,  மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் உடனடியாக தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT