சென்னை

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: 10 ஆயிரம் பேரிடம் ரூ.16.80 லட்சம் அபராதம்

4th Sep 2019 04:30 AM

ADVERTISEMENT


சென்னையில் பயணச் சீட்டு இன்றி பயணித்த 10 ஆயிரத்து 791 பேரிடம் அபராதத் தொகையாக  ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக  போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேருந்துகளில் உரிய பயணச் சீட்டு இல்லாமலும், அதேபோல மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. 
இந்தச் சோதனையின் அடிப்படையில், கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டுள்ளது.  உரிய பயணச் சீட்டு இல்லாமல் அல்லது பயண அட்டை இல்லாத நபர்களிடம் இருந்து ரூ.500 அதிகபட்ச அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
கடந்த மே மாதத்தில் பயணச் சீட்டு இன்றி பயணித்த 3,915 நபர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.6 லட்சத்து 850, ஜூன் மாதத்தில் 3,655 நபர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 100, ஜூலை மாதத்தில் 3,218 நபர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 900 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.  இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.  மேலும் போக்குவரத்துப் பயணிகளை பரிசோதிக்கும் பரிசோதகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT