சென்னை

காவல்துறையுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் ரோந்து

4th Sep 2019 04:32 AM

ADVERTISEMENT


சென்னையில் காவல்துறையுடன் கல்லூரி மாணவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் அடிக்கடி மோதிக் கொண்டனர்  இதைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைளை எடுத்தது. இருப்பினும் மாணவர்கள் அவ்வப்போது மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால், பரபரப்பாகப் பேசப்பட்டது.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 6 மாணவர்களை கைது செய்தனர்.
 இதேபோல மாணவர்கள் பொது இடங்களில் மோதிக் கொள்வதை தடுக்கும் வகையிலும், பேருந்து வழித்தட அடிப்படையில் மாணவர்கள் தகராறு, அடிதடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கத் தொடங்கியது. இதில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கையும் விடுத்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி: இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, சென்னை காவல்துறை, கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும், கல்லூரி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னையில் சிக்கி, அடிதடி, வன்முறையில் ஈடுபடுகிறவர்கள், பின்னர் சமூகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது குறித்த குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டது. மேலும், காவல்துறை, கல்லூரி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை நாள்களில் மாணவர்கள் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணி, ரோந்துப் பணியில் ஈடுபடலாம் எனவும், விருப்பமுள்ள கல்லூரி அனுமதியுடன் அப்பகுதி காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்கள் ரோந்து: இதன் அடிப்படையில், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள், காவல்துறையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்தனர். 
இதையடுத்து அந்தக் கல்லூரி மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெள்ளை வண்ண சட்டையும், காக்கி வண்ணத்தில் பேண்டும், காக்கி வண்ணத்தில் தொப்பியும் அணிந்து வரும்படி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே, அந்த சீருடையில் 30 மாணவர்கள் அங்கு வந்தனர்.  பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து சூளைமேடு,ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, விடுமுறை நாள்களில் கல்லூரி மாணவர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இத் திட்டத்தை நகரின் பிற பகுதிகளில் செயல்படுத்துவற்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT