சென்னை

ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி அறிமுகம்

4th Sep 2019 04:32 AM

ADVERTISEMENT


அஞ்சல்துறை சார்பில், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் (ஐபிபி) வங்கியில் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்மூலம், எந்தவொரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், ஐபிபி வங்கியில் தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி அதில் இருந்து பணம் எடுக்கலாம். 
தமிழக அஞ்சல் துறை சார்பில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆதார் வழி பணப் பரிவர்த்தனை முறை அறிமுக விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. விழாவில், தமிழக அஞ்சல்துறை முதன்மை தலைவர் எம்.சம்பத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார். பின்னர், அவர் பேசியது:
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தனது கிளைகளும், 11 ஆயிரத்து 121-க்கும் மேற்பட்ட வங்கி சேவை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில்,  கிராமப்புறங்களில் 8,580-க்கும் மேற்பட்ட வங்கி சேவை மையங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 3.93 லட்சம் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்  வங்கியில் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன்மூலம், எந்தவொரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், ஐபிபி வங்கி மூலம் தங்களுடைய ஆதார் எண்,  தங்கள் கைவிரல் ரேகைப் பதிவைப் பயன்படுத்தி அதில் இருந்து பணம் எடுக்கலாம். இதற்காக, அவர்கள் ஐபிபி வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 5 முதல் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருக்கும். இதனால், அவர்களுடைய அன்றாட பணிகள் பாதிக்கப்படும்.  இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தியது மூலமாக, அவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வீடு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள வங்கி சேவை மையம் மூலம் பணம் எடுக்கலாம். 
இதன்மூலம், அவர்களுக்கு வீண் அலைச்சல் குறைவதுடன் நேரம் மிச்சமாகும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் விஜயன் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT