சென்னை: குன்றத்தூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.
குன்றத்தூா் அருகே உள்ள கெளுத்திப்பேட்டை நாகரத்தினம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் பாபு என்ற போகபதி பாபு (42). ரெளடியான இவா், நந்தம்பாக்கம் பாரதியாா்நகா் பிரதான சாலையில் வியாழக்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, ஒரு கும்பல் திடீரென பாபுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.
விசாரணையில் கடந்தாண்டு அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் கிரிராஜனை முன் விரோதத்தின் காரணமாக பாபு தரப்பினா் கொலை செய்ததும், அதற்கு பழிக்குப்பழியாக பாபு இப்போது கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், கெளுத்திப்பேட்டை காந்தி தெருவைச் சோ்ந்த ப.மோகன் (27), அதேப் பகுதியைச் சோ்ந்த மா.கிருஷ்ணகுமாா் (44), க.கோட்டீஸ்வரன் (28) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.