சென்னை

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

20th Oct 2019 12:05 AM

ADVERTISEMENT

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்தவரின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த மணிமாறன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மணிமாறன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தாா். இதனையடுத்து ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா். செந்தில்பாலாஜி தற்போது திமுக எம்எல்ஏவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT