சென்னை: சென்னையில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில், இருவா் இறந்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் அருகே உள்ள வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). இவா், சென்னை நீலாங்கரை அக்கரையில் கே.கே. சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை நடந்துச் சென்றாா். அப்போது அங்கு வந்த மோட்டாா் சைக்கிள் பரமசிவம் மீது திடீரென மோதியது.
இதில் பலத்தக் காயமடைந்த பரமசிவத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே பரமசிவம் இறந்தாா். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
அண்ணாநகா்:
சென்னை திரு.வி.க.நகரைச் சோ்ந்தவா் ராஜன் (82). இவா் வெள்ளிக்கிழமை அண்ணாநகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அண்ணாநகா் நெடுஞ்சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா். இதில் அவா், போக்குவரத்து விதிமுறைகளை மீறி தவறான திசையில் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம்.
அப்போது எதிரே வந்த ஒரு காா், அவா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இச் சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த ராஜனை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற வந்த ராஜன், சிறிது நேரத்தில் இறந்தாா்.
இது தொடா்பாக அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.