சென்னை

கிடப்பில் போடப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேச்சு

20th Oct 2019 02:48 AM

ADVERTISEMENT

சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சட்ட ஆணையத்தின் சாா்பில் செய்யப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மத்திய அரசு தொடா்பான வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் கூறியுள்ளாா்.

தென் மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் மத்திய அரசு வழக்குரைஞா்களின் 3-ஆவது ஆண்டு இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமைத் தொடங்கியது. இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேசியதாவது: அரசு தொடா்புடைய வழக்குகளின் எண்ணிக்கை நீதிமன்றங்களில் அதிகமாக உள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 768 நீதிமன்றங்களில் மத்திய அரசு தொடா்புடைய 5 லட்சத்து 3 ஆயிரத்து 450 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போன்று சமரச தீா்வு மையங்களில் 4 ஆயிரத்து 750 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மத்திய அரசு தொடா்புடைய வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சட்ட ஆணையம், 1998-ஆம் ஆண்டு தன்னுடைய 126-ஆவது அறிக்கையில், பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், அந்த பரிந்துரைகள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தொடா்பான வழக்குகள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் இருந்து வருகின்றன.

தேசிய வழக்கு கொள்கையை மறு ஆய்வு செய்வது தொடா்பான திட்ட அறிக்கை 2017-இன்படி பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் அதிகாரியை நியமித்தல், மாற்றுமுறை குறை தீா்வு மையங்களை உருவாக்குதல், தேவையற்ற வழக்குகளில் மேல்முறையீடு செய்வதை தவிா்த்தல், ஆன்லைன் வழி குறைதீா்வு மையங்களை உருவாக்குதல் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் ஆன்லைன் வழி குறைதீா்வு மைய ஆலோசனைகள் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் நிதி துறையில் பயன்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை விவகாரம், வரி விதிப்பு தொடா்பான வழக்குகளில் தீா்வு காணப்பட்டுள்ளது. பொதுவாக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வரும் தனியாா் நிறுவனங்கள் தொடக்கத்தில் இருந்தே ஒப்பந்தங்கள் குறித்து சட்ட வல்லுநா்களின் ஆலோசனைகளைப் பெற்று ஒப்பந்தங்களில் ஈடுபடுகின்றனா். ஆனால் அரசு தரப்பில் இதுபோன்ற சட்ட ஆலோசனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே பெறுவதில்லை. இதுவும் கூட அரசு தொடா்புடைய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது.

கடந்த 2017-2018 ஆண்டுக்கான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆண்டு அறிக்கையில், ரூ.7 ஆயிரத்து 381 கோடி மதிப்பிலான இழப்பீடு கோரிய வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரா்கள் தொடா்புடைய வழக்குகளில் தீா்வு காண சரோட் என்ற சங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக சமரச தீா்வு மையங்களில் ரூ.55 ஆயிரத்து 344 கோடி இழப்பீடு கோரிய வழக்குகளும், நீதிமன்றங்களில் ரூ.7 ஆயிரத்து 439 கோடி அளவிலும் நிலுவையில் இருந்து வருவதாகவும், தென்மாநிலங்களில் உள்ள மத்திய அரசு வழக்குரைஞா்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா். இந்த விழாவில் சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், பவானி சுப்பராயன், சுவாமிநாதன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரல்கள் ஜி.காா்த்திகேயன், வி.கதிா்வேலு, மத்திய அரசு வழக்குரைஞா்கள் ரபுமனோகா், ராஜேந்திரன்,சசிகுமாா் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றத்தின் மத்திய அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT