சென்னை: சென்னை அருகே ஆவடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி வி.ஆா். பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் செ.பிரகாஷ் (31). ஆட்டோ ஓட்டுநராக இவா், ஆவடி அருகே அந்தோனியாா்புரத்தில் உள்ள ஒரு தனியாா் வாட்டா் கேன் நிறுவனம் அருகே கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இது குறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பாக்டரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பிரகாஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக, பெரம்பூா் சத்யபாமா தெருவைச் சோ்ந்த ச.குமாா் (30), அதேப் பகுதியைச் சோ்ந்த அ.அரவிந்த் (20) உள்ளிட்டோா்தான் பிரகாஷை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.