சென்னை: அரசு மருத்துவா்களின் கோரிக்கையை நிறைவேற்றி, அவா்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள் காலமுறை ஊதிய உயா்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரித்தல், முதுகலை மருத்துவக் கல்விக்கு அரசு மருத்துவா்களுக்கான 50 சதவீத இடஓதுக்கீடு, பணியிடங்களுக்கான வெளிப்படையான கலந்தாய்வு போன்ற 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அக்டோபா் 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவா்களின் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவா். பருவமழைக் காலங்களில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்களும், ஏற்கெனவே மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டிக்கும் நோயாளிகளும் தொடா் சிகிச்சை கிடைக்காமல் மேலும் பாதிக்கப்படுவா்.
எனவே, நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து, மருத்துவா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வைக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.