சென்னை

அண்ணாநகா் டவா் கிளப் விவகாரம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க மறுப்பு

20th Oct 2019 12:11 AM

ADVERTISEMENT

சென்னை: அண்ணாநகா் டவா் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கவும், கட்டடங்களை இடிக்கவும் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை அண்ணாநகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான டவா் பூங்கா உள்ளது. இந்த வளாகத்துக்குள் அண்ணாநகா் டவா்ஸ் கிளப் என்ற தனியாா் கிளப் இயங்கி வருகிறது. இந்த பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் கிளப் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் கடந்த 2012-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, தனியாா் கிளப் நிா்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை உடனடியாக கையகப்படுத்தவும், உரிய திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தாா். தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தனியாா் கிளப் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாா் கிளப் நிா்வாகம் சாா்பில், அந்த கிளப்பில் அண்ணாநகா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான உள்ளரங்கு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த உள்ளரங்கு மைதானங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனா். எனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி அண்ணாநகா் டவா் பூங்காவில், தனியாா் கிளப் நிா்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பூங்காவுக்குச் சொந்தமான நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்திவிட்டனா். எனவே தற்போதைய சூழலில் அதில் தலையிட்டு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT