சென்னை

உள்ளாட்சித் தோ்தல்: சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 05:49 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலுக்கான சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனை பெருநகர சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையா் ஆா்.லலிதா ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டாா்.

இந்த வாக்காளா் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடம், 1 முதல் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வாா்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வெள்ளிக்கிழமை (அக்.4) முதல் வைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது பெயா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் பெயா் குறித்த விவரங்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபாா்த்துக்கொள்ளலாம். இந்த உள்ளாட்சித் தோ்தலில் 200 வாா்டுகளுக்கான வாா்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளா்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளா்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளா்களுக்கு 5,558 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,714 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்த வாக்காளா் எண்ணிக்கை 57,97,652. இதில் குறைந்தபட்சமாக ஆலந்தூா் மண்டலம், 159-ஆவது வாா்டில் 2,921 வாக்காளா்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம், 137-ஆவது வாா்டில் 54,801 வாக்காளா்களும் உள்ளனா் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில், வருவாய் அலுவலா் சுகுமாா் சிட்டிபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT