சென்னை

தமிழ் இதழியலின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும்: எழுத்தாளர் மாலன்

2nd Oct 2019 04:22 AM

ADVERTISEMENT


மொழி,  உள்ளடக்கம், வடிவம் போன்றவற்றில் ஏற்கெனவே செய்த விஷயங்களையே திரும்பச் செய்யாமல்  தமிழ் இதழியல் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்று எழுத்தாளர் மாலன் கூறினார்.
அந்திமழை இதழ் சார்பில் எழுத்துலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த எழுத்தாளர் மாலனுக்கு பாராட்டு விழா மற்றும் மாலன் நேர்காணல் நூல் வெளியீட்டு விழா, சென்னை கவிக்கோ அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், தனது நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்களை மாலன் கௌரவித்தார்.

இதையடுத்து அவர் ஆற்றிய ஏற்புரை: 
எனது வாழ்க்கையில் எந்த  இடத்தையும் அடைய விரும்பவில்லை; நடந்து செல்லவே விரும்புகிறேன். இலக்கு என்று ஏதாவது ஒன்று இருந்தால், நான் எடுத்துக் கொண்டிருக்கும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அது நமக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததைப் போன்று இல்லாமலும், நமக்குப் பின்னால் வரப்போகிறவர்கள் செய்ய முடியாதளவுக்கும் நாம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. எனது எல்லா மகிழ்ச்சிகளும் இதை  நோக்கிதான் இருக்கிறது.  எனது வாழ்க்கை அறிதல், ஆக்கல், பகிர்தல் ஆகிய மூன்று வார்த்தைகளால் இயங்குகிறது.  ஒன்றை அறிவது இன்னொன்றை உருவாக்குவதற்காக, ஒன்றை உருவாக்குவது அதை இன்னொருவரிடம் பகிர்வதற்காக. இந்த மூன்றும் இல்லாமல் வாழ்க்கை முழுவதும் அறிந்து கொண்டே இருந்தால் அந்த அறிவு பயனற்றுப் போகும் அல்லது முழுமை பெறாது. எனவே இந்த மூன்றும் இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளவே விரும்புகிறேன். 
இதழியல் ஓர் உள்ளுணர்வு: இதழியலில் யார் ஒருவரையும் இதைக் கற்றுக் கொள்,  அதைக் கற்றுக் கொள் என வலியச் சென்று திணிக்க முடியாது என்பது எனது கருத்து. இதழியல் என்பது ஓர் உள்ளுணர்வாகும். அதைப் பயிற்றுவிக்க முடியாது என நினைக்கிறேன். இருக்கக் கூடிய திறமையை ஊக்கப்படுத்தி அதை மலரச் செய்ய முடியுமே தவிர, அந்த உள்ளுணர்வே இல்லாதவர்களை ஒருபோதும் இதழியலாளராக்க முடியாது.  நான் பணியாற்றிய திசைகள், தினமணி, புதிய தலைமுறை என ஒவ்வொரு பத்திரிகையும் எனக்கு சிறந்த அனுபவங்களைப் பெற்றுத்தந்தன.  அவற்றின் மூலம் எனக்கு கிடைத்த சிறப்புகள் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் சொந்தம். 
தமிழ் இதழியலின் எல்லைகளை, நாளுக்கு நாள் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். அதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே செய்த விஷயங்களை திரும்பத் திரும்பச் செய்யாமல் மொழி,  உள்ளடக்கம், வடிவம்,  வாசகர்களோடு இருக்கக் கூடிய உறவு என எல்லாவற்றையும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி, இலக்கியங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றைக் கணக்கில் கொள்ளும்போது நாம் இப்போது இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். அந்த வளர்ச்சியை எவ்வாறு பெறப்போகிறோம் என்பதே பத்திரிகையாளர்களுக்கு இருக்கக் கூடிய சவாலாகும். ஓர் எழுத்தாளனின் சவாலும் அதுதான். இதழியலில் புதிய விஷயங்களைக் கையாள வேண்டும்.  இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த அந்திமழை குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 
எழுத்தாளர் சிவசங்கரி: பத்திரிகையாளர் மாலன் பன்முகங்கள் கொண்டவர்.  தேசத்தின் நலனில் அளவு கடந்த பற்று கொண்டவர். அவர் எனக்கு 45 ஆண்டு கால நண்பர். அவர் தனது அனுபவத்தில் யாரையும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை.  இலக்கியம், இதழியல் மேம்பாடு, சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் மாலன். அவர் தனது எழுத்தில் மேதாவித்தனத்தையும், அறிவுஜீவித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் அனைவருக்கும் மிக எளிதாக புரியும் வகையில் எழுதுவார். அரசியல், இலக்கியத்தில் நுண்ணறிவு கொண்டவர். சங்க காலம், வரலாறு, இலக்கியம் என எதில் சந்தேகம் எழுந்தாலும் அதற்கு மாலன் வழிகாட்டு நூலாக இருக்கிறார். 
பத்திரிகையாளர் சுதாங்கன்: மாலனை எழுதத் தூண்டியவர், அவரது சகோதரர் ரமணன். சாவி இதழில் தமிழன் என்கிற பெயரில் மாலன் காரசாரமான கேள்வி-பதில் எழுதுவார். உலக விஷயங்களை டைனிங் டேபிள் என்கிற பகுதியில் ரசிக்க வைப்பார். எந்த விஷயங்களையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் கொடுப்பதில் அவர் வல்லவர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகை துறைக்கு மாலன் ஆற்றி வரும் பணிகள் குறித்து திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ்.சாய், விமர்சகர் யுவகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.  முன்னதாக, இந்த விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து மாலன் நேர்காணல் நூலை வெளியிட, எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அந்திமழை இதழ் நிறுவனர் இளங்கோவன், நிர்வாக ஆசிரியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT