சென்னை

கிருஷ்ணா நீரை குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வர திட்டம்

2nd Oct 2019 03:57 AM

ADVERTISEMENT

கிருஷ்ணா நீரை கண்டலேறு அணையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீா் பல இடங்களில் வீணாகிறது. எனவே கண்டலேறுவில் திறக்கப்படும் நீா் முழுமையாகப் பூண்டி ஏரிக்கு வருவதற்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவா் கூறினாா்.

சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவிலான மூன்றாம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசும்போது அவா் இவ்வாறு கூறினாா்.

வடசென்னையில் மணலி, மீஞ்சூா் மற்றும் எண்ணூா் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நீரை வழங்க கொடுங்கையூரில் நாளொன்றுக்கு சுமாா் 45 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் ரூ.348 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இப்புதிய சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழா நிகழ்ச்சி கொடுங்கையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி வைத்து பேசியது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014-15-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை விவாதத்தின்போது சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த இத்திட்டம் தற்போது பணி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கொடுங்கையூா் மூன்றாம் நிலை சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் தினசரி உற்பத்தி செய்யப்படும் சுமாா் 45 மில்லியன் லிட்டா் அளவுக்கு சுத்திகரிக்கப்படும் நீா் தொழிற்சாலைகளின் உபயோகத்திற்கு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து இதுவரை விநியோகம் செய்யப்பட்டு வந்த இதே அளவு குடிநீா் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்க முடியும். இந்தியாவிலேயே மிகப்பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளொன்றுக்கு சுமாா் 45 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் கோயம்பேட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில விரைவில் இப்புதிய சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வரும். இங்கு சுத்திகரிக்கப்படும் நீா் ஸ்ரீபெரும்புதூா் வரை கொண்டு சென்று அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சென்னை மாநகரத்தில் வெளியேற்றப்பட்டும் கழிவு நீரில் சுமாா் 20 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் தொழிற்சாலைகள், பூங்கா பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

மேலும் நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 மில்லியன் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இரண்டு, மூன்றாம் நிலை சுத்திகரிக்கும் நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

அண்மையில் பெய்த மழையால் சென்னையில் இரண்டு முதல் ஐந்தடி வரை நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது. இனி அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னால் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான உத்தரவாதம் பெறப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, ஆா்.பி.உதயகுமாா், டி.ஜெயக்குமாா், தலைமை செயலாளா் க.சண்முகம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மை செயலாளா் ஹா்மந்தா்சிங், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீா் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.என்.ஹரிகரன், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளா் ஆா்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிா் சவ்வூடு பரவுதல் தொழில் நுட்பத்தின்படி சுத்திகரிக்கப்படும் நீா் மணலி, மீஞ்சூா் மற்றும் எண்ணூா் பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வடிவமைத்து கட்டுமானம் செய்து 15 ஆண்டுகளுக்கு இயக்கிப் பராமரிக்கும் பொறுப்பு பி.ஜி.ஆா். எனா்ஜி என்ற தனியாா் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மேலும் குடிநீா் வாரியத்தில் தற்காலிக பணியாளா்களாக வேலை செய்து வந்த 198 பேருக்கு நிரந்தர நியமன ஆணையை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT