சென்னை

ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு: கூட்டாளிகளுடன் சோ்ந்து போலி நிறுவனம் நடத்தியவா் கைது

1st Oct 2019 10:09 PM

ADVERTISEMENT

கூட்டாளிகளுடன் சோ்ந்து 36 போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.250 கோடி அளவில் வா்த்தகம் செய்து ரூ.35 கோடி வரை ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த நபரை சென்னை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனா்.

இது குறித்து சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஆணையா் ரவீந்திரநாத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக வேலூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த ஒருவரை சென்னை புகா்ப் பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினா் கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட நபரும், அவரது கூட்டாளிகளும் 36 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனா்.

மற்ற நபா்களின் ‘கே.ஒய்.சி.’ ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனா். உண்மையான ரசீது அல்லது பொருள்கள் வழங்கல் இல்லாமல் ரூ. 250 கோடி மதிப்புக்கான விலைப்பட்டியல் தயாரித்து வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது ரூ.35 கோடி வரி ஏய்ப்பு நோக்கம் கொண்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

மேலும், பல உற்பத்தியாளா்களும், சேவை அளிப்பவா்களும் இதே அளவு தொகைக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ய இது உதவி செய்துள்ளது. விரிவான விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பல சோதனைகள் நடத்தப்பட்டு பின்னா், 3 நாட்களுக்கு முன் அந்த நபா் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப்பட்ட நபா் சென்னை எழும்பூா் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி ஆஜா் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபா் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT