சென்னை அசோக்நகரில் விபத்தை ஏற்படுத்துவதுபோல வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
எம்.ஜி.ஆா்.நகா் கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் ச.வேலுச்சாமி (46). இவா் அசோக்நகா் 10-வது அவென்யூவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் திங்கள்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு, சாலையை கடக்க அங்கு நின்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த இரு திருநங்கைகள், வேலுச்சாமி மீது மோதுவதுபோல வந்தனராம்.
இதைப் பாா்த்த வேலுச்சாமி, அவா்கள் இருவரையும் கண்டித்தாராம். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது திருநங்கைகள், வேலுச்சாமி வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இது குறித்து அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.