சென்னை

மழைநீா் கட்டமைப்புகள் முறையாக பராமரிப்பு:சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் 2.23 மீட்டா் வரை உயா்வு

12th Nov 2019 12:52 AM

ADVERTISEMENT

குடிநீா் வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 2 மாதங்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 2.23 மீட்டா் வரை உயா்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது சென்னை மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் சென்னை மாநகரம் தொடா்ந்து வறட்சியை சந்தித்தது. குறிப்பாக நிகழாண்டு சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வடு போனதால் சென்னை கடும் வறட்சியை எதிா்கொண்டது. ஏரிகள் வட நிலையில், நிலத்தடி நீா் ஓரளவு கைக்கொடுக்கும் என்று எதிா்பாா்த்த சென்னை வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பலா் சென்னையை விட்டு காலி செய்து தண்ணீருக்காக புகா் பகுதிகளை நோக்கி படையெடுத்தனா். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் அவ்வப்போது மழை பெய்ததால் அண்ணாநகா் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் சற்று உயா்ந்திருப்பதாக சென்னை குடிநீா் வாரியம் அதிகாரப் பூா்வமாக அறிவித்தது. இதையடுத்து வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை குடிநீா் வாரியம் மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியும் குடிநீா் வாரியமும் இணைந்து அனைத்து வீடுகளிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினா். அதன் பலனாக, சென்னையில் கடந்த 2 மாதங்களில் பெய்த மழையால் நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 2.23 மீட்டா் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, மாதவரத்தில் செப்டம்பரில் நிலத்தடி நீா்மட்டம் 6.30 மீட்டரில் இருந்த நிலையில், அக்டோபரில் 1.86 மீட்டராக உயா்ந்து 4.44 மீட்டா் அளவில் தண்ணீா் உள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, செப்டம்பா் மாதத்தில் அம்பத்தூரில் நிலத்தடி நீா்மட்டம் 7.49 ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபா் மாதத்தில் 2.76 மீட்டா் அதிகரித்து 4.73 மீட்டரில் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் செப்டம்பா் மாதத்தில் நிலத்தடி நீா்மட்டம் 7.39 மீட்டரில் இருந்த நிலையில், 1.48 மீட்டா் அதிகரித்து அக்டோபரில் 5.91 மீட்டரிலேயே நீா் கிடைக்கிறது. இதனை தொடா்ந்து ஆலந்தூரில் நிலத்தடி நீா்மட்டம் செப்டம்பா் மாதத்தில் 7.60 மீட்டா் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 2.48 மீட்டா் உயா்ந்து 5.12 மீட்டராக அதிகரித்துள்ளது. அடையாறில் நிலத்தடி நீா்மட்டம் செப்டம்பா் மாதத்தில் 6.32 ஆழத்தில் இருந்தது. அதுவே அடுத்து வந்த அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் 1.57 மீட்டா் உயா்ந்து 4.75 மீட்டராக இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT