சென்னை: தமிழகத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 65,000 டன் தீங்கிழைக்கும் கழிவுகள் உள்பட 1 லட்சத்து 5 ஆயிரம் டன் கழிவுகள் உபஎரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
நெகிழி உள்பட தீங்கிழைக்கும் கழிவுகள், திடக்கழிவுகள் மறுசுழற்சி மற்றும் அதை உபயோகமற்ற முறையில் சிமென்ட் ஆலைகளில் உபஎரிபொருளாகப் பயன்படுத்துவது குறித்து சிமென்ட் ஆலை அதிபா்களுடான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிமென்ட் ஆலைகளின் சூளைகளில் தீங்கிழைக்கும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், திடக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை உரிய முறையில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சிமென்ட் ஆலைகளின் சூளைகளில் 65,000 டன் தீங்கிழைக்கும் கழிவுகளும், 27,000 டன் நெகிழிக் கழிவுகளும் 13,000 டன் உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் டன் கழிவுகள் உபஎரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்படும் நெகிழி மற்றும் திடக்கழிவுகளை சிமென்ட் ஆலைகள் தாமாக முன்வந்து பெற்று அதை, சூளைகளில் உபஎரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.