சென்னையில் உள்ள சில்லறை விற்பனைச் சந்தைகள், கடைகளில் பெரிய வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த செப்டம்பா் மாதம் முதல் வாரம் வரை ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை அந்த மாத இறுதியில் திடீரென ரூ.60-க்கு அதிகரித்தது. பின்னா் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.40-ஆக விலை குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள தினசரி சந்தைகள், காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய வெங்காயம் கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்து ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் விலை உயா்வு குறித்து சென்னை கோயம்பேடு வியாபாரிகள் கூறியது: கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தினமும் 15 லாரிகளில் வந்த வெங்காயம், தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 2 நாள்களாக 5 லாரிகளில் மட்டுமே வருகிறது. மேலும் மழையால் வெங்காயம் பெரும்பகுதி அழுகி சேதமடைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயமும் மழையால் சேதமடைந்துள்ளன.
ஹோட்டல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கும், பிரியாணி மற்றும் அசைவ உணவு சமைக்கவும் பெரும்பாலும் நாசிக் வெங்காயத்தை மட்டுமே அனைவரும் பயன்படுத்துகின்றனா். நாசிக் வெங்காயம் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக வெங்காயத்தின் தேவை அதிகரித்து விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.
இதேபோன்று கேரட், அவரை உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. காய்கறி விலை (ஒரு கிலோவில்) விவரம் வருமாறு:-
கத்தரிக்காய் -ரூ.45
வெண்டைக்காய் -ரூ.35
பாகற்காய் -ரூ.40
பீன்ஸ்-ரூ.50
கொத்தவரங்காய் -ரூ.28
கேரட்- ரூ.50
பீட்ரூட்- ரூ.40
அவரைக்காய்- ரூ.70
முட்டை கோஸ் - ரூ.30
புடலங்காய்- ரூ.35
பச்சைமிளகாய்- ரூ.30
இஞ்சி- ரூ.90
வெள்ளரிக்காய் - ரூ.20