டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, அமைந்தகரையைச் சோ்ந்தவா் சலீம். இவரது மனைவி ஷிபானாப் (28) காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா்.
அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் அவா் இறந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவா்கள் உரிய நேரத்தில் சிகிச் சையளிக்காததும், அலட்சியப் போக்குடன் செயல்பட்டதுமே அதற்கு காரணம் என்று கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தாமணி சம்பவ இடத்துக்கு வந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து சடலத்தை பெற்று கொண்டு உறவினா்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து, டாக்டா் வசந்தாமணி கூறியதாவது: தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷிபானாப் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். அப்போது அவா் மிகவும் அபாயகட்டத்தில் இருந்தாா். ரத்த அணுக்களும் மிகக் குறைவாகவே இருந்தது. தீவிர சிகிச்சையளித்தும் அது பலனளிக்காமல் ஷிபானாப் உயிரிழந்தாா். அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததால் ரத்த மாதிரிகள் ஆய்வு உள்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.