"டெட்' தேர்வுக்கு பயிற்சி: திறமையான பயிற்றுநர்களை நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் ("டெட்') தேர்ச்சி பெற வேண்டிய  கட்டாயத்தில் உள்ள  ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க  தகுதியான பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ("டெட்') தேர்ச்சி பெற வேண்டிய  கட்டாயத்தில் உள்ள  ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க  தகுதியான பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 அரசு மற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பணியமர்த்தப்பட்டனர். 
தற்போது 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த ஆசிரியர்களில் 1,500 பேர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை.
இதனால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கிலும்  1,500 ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.  
ஏற்கெனவே இதுபோல பல வாய்ப்புகள் அந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்பட்டது. தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 இந்த நிலையில், வரும் ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  
இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லையெனில் அவர்கள் பணியிழக்கும் நிலை ஏற்படலாம்.
  இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்க வசதியாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 10 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 
இதற்கிடையே பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுநர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், "எங்களுக்கான "டெட்' பயிற்சி வகுப்புகள் அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் கருத்தாளர்களே பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
தகுதித் தேர்வுக்கான பாடத்திட்ட புத்தகங்கள், தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்கள் மற்றும் உளவியல் என மொத்தம் 700 யூனிட்டுகள் உள்ளன. அவற்றை 10 நாள்களில் முடிக்க முடியாது. அதற்கேற்ப திறன்மிக்க பயிற்றுநர்கள் நியமிக்கப்படவில்லை என்பது பெருங்குறையாக உள்ளது. 
பெயரளவுக்கு இந்தப் பயிற்சியை நடத்துகின்றனர். உளவியல் தவிர மொழிப் பாடங்கள் மற்றும் முதன்மைப் பாடங்கள் நடத்த திறமையான பயிற்றுநர்களை நியமித்தால் மட்டுமே பயிற்சி உதவியாக இருக்கும்' 
என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com