ஆன்லைனில் சுயவிளம்பரம் தேடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை

சுயலாபத்துக்காக ஆன்லைன் மூலமாக விளம்பரம் தேடிக் கொள்ளும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சுயலாபத்துக்காக ஆன்லைன் மூலமாக விளம்பரம் தேடிக் கொள்ளும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 அண்மைக் காலமாக, சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் குறித்த விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன. பயன்பாட்டாளர்கள் அவற்றை விரும்பாத போதிலும், அனைத்து வலை தளப் பக்கங்களிலும் அதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
 மக்களை ஏமாற்றும் நோக்கில் பொய்யான சில மருத்துவ உத்தரவாதங்கள் அதில் இடம்பெறுகின்றன. இந்த நிலையில், அவற்றை முறைப்படுத்தும் வகையில் சில அறிவுறுத்தல்களை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், மருத்துவ அமைப்புகளுக்கும் தமிழக மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அந்த கவுன்சிலைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:  தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அந்த கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 90 ஆயிரம் மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றி வருவதாகத் தெரிகிறது. 
சமீபகாலமாக ஆன்லைனில் விளம் பரங்களை மேற்கொள்ளும் முகவர்கள் அதிகரித்து விட்டனர். அதிக பணம் கொடுக்கும் மருத்துவர்களுக்கு இணையதள விளம்பரங்களின் வாயிலாக நற்சான்று அளிக்கும் நடவடிக்கைகளில் அந்த முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை தலை சிறந்த மருத்துவர் என்றும் பிரபலமானவர் என்றும் தவறான பிரசாரங்கள் அதன் மூலம் பரப்பப்படுகின்றன. 
இத்தகைய சுய விளம்பரத்தை மருத்துவர்கள் தேடிக்கொள்வது விதிகளுக்கு புறம்பானது. லாப நோக்கில் ஆன்லைனில் மருத்துவர்கள் தங்களது புகைப்படங்களை வெளியிடுவதுகூட முறைகேடான செயலாகும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com