சரிந்து விழுந்த 500 டன் பழங்கள்: 14 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்ட ஊழியர்

சென்னை ஆவடியில் கிடங்கில் 500 டன் பழங்கள் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட ஊழியர் 14 மணி நேரம் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டார்.


சென்னை ஆவடியில் கிடங்கில் 500 டன் பழங்கள் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட ஊழியர் 14 மணி நேரம் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டார்.
சென்னை, ஷெனாய் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான பழங்கள் பதப்படுத்தும் கிடங்கு, ஆவடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கிடங்கில், அஸாம், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 
இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பழங்கள் பதப்படுத்தப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. அதேபோல நம் நாட்டில் விளையும் பழங்களும் இங்கு பதப்படுத்தப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இந்த கிடங்குக்கு சரக்கு பெட்டக லாரி மூலம் பழங்கள் வந்தன. பெட்டிகளில் இருந்த அந்த பழங்களை பதப்படுத்தும் அறையில் உள்ள அடுக்குகளில் ஆரிப் (23), ஜாரூல் (24), செய்யதுஹக் (22), ஹையத்துல் ஹக் (21) ஆகிய 4  பேர் நவீன இயந்திர மூலம் அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுக்குகளில் இருந்த பழப் பெட்டிகள் இரவு 11 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தன. இதில் 4 தொழிலாளர்களும் பழப்பெட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், 4 பேரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், அறையில் இருந்த 500 டன் பழங்கள் சரிந்து விழுந்ததால், அந்த அறை வாசலையும் மூடியது. இதனால், அவர்களால் யாரையும் மீட்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பழ குவியலில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதில் ஆரிப், ஜாரூல், செய்யதுஹக் ஆகியோர் உடனடியாக மீட்டனர்.
14 மணிநேர போராட்டம்: 
ஆனால் ஹையத்துல் ஹக்கை மீட்பதில் தீயணைப்புப்படையினருக்கு சிக்கல் நீடித்தது. அவர் அறையின் உள்பகுதியில் சிக்கிக் கொண்டதால், அவரை மீட்பது தீயணைப்பு படை வீரர்களுக்கு சவாலானதாக இருந்தது. காலை வரை போராடிய தீயணைப்புப் படை வீரர்கள், பின்னர் பொக்லைன் வாகனம் மூலம் அந்த அறையின் வாயில் சுவரை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பழங்களுக்குள் சிக்கியிருந்த ஹையத்துல் ஹக்கை காலை 9 மணியளவில் உயிருடன் மீட்டனர். மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஹையத்துல் ஹக் சுமார் 14 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
இச் சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்தின் காரணமாக ரூ.4 கோடி மதிப்புள்ள பழங்கள் சேதமடைந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com