முடிச்சூர் சீக்கனா ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டடம், விளையாட்டு பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அகற்றி,தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று முடிச்சூர் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி குடியிருப்போர் பாதுகாப்பு நலச் சங்கம் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பேசியது: முடிச்சூரில் ஓரிரு வார்டுகளைத் தவிர அனைத்து வார்டுகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
முடிச்சூர் ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் காரணமாக பரப்பளவு குறைந்து போய்விட்ட சீக்கனா ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியது தான் முக்கிய காரணம்.
சீக்கனா ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், தனியார் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டடம்,விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சீக்கனா ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியைத்தூர்வாரி ஆழப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மண்ணிவாக்கத்தில்...மண்ணிவாக்கம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஊரப்பாக்கத்தில்... ஊரப்பாக்கம் ஊராட்சியில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையைப் போக்க லாரிகள் மூலம் தண்ணீர் தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஊராட்சிப் பகுதியில் அதிகரித்து வரும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்கும் வகையில் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்க முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் ஊராட்சி அலுவலர் கருணாகரன் வலியுறுத்தினார்.