சென்னை புறநகர்ப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க துரித நடவடிக்கை

சென்னை புறநகர்ப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே. மிஸ்ரா கூறினார்.


சென்னை புறநகர்ப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே. மிஸ்ரா கூறினார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் கே.மிஸ்ரா சென்னை புறநகர்ப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு  குறித்து அனகாபுத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க மாநில பேரிடர் மேலாண்மைத் திட்ட நிதியின் கீழ் ரூ. 29.8 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, குடிநீர் குழாய்களைச் சீரமைப்பது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட 482 குடிநீர் திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 20 நாள்களில் நிறைவு செய்யப்பட்டு போதிய குடிநீர் கிடைக்க வழி செய்யப்படும்.
தாம்பரம் நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க 20, செம்பாக்கம் நகராட்சியில் 12 வீதம் ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம் நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ. 14 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 48 ஆழ்துளைக் குழாய் கிணறுகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பாலாற்றில் மேலச்சேரி, பழைய சீவரம் பகுதிகளில் புதிதாக 5 ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் கூடுதல் குடிநீர் அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும். புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை வாரத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர். பேட்டியின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com