சென்னை அருகே புதிய நீர்த்தேக்கம்: 3 மாதங்களில் பணிகள் முடியும்

சென்னை அருகே கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கப் பணிகள் மூன்று மாதங்களில்
கும்மிடிப்பூண்டிஅருகே கண்ணன்கோட்டை - தேர்வாய் புதிய நீர்த்தேக்கப் பணிகளுக்காக ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் நடைபெற்றுவரும் மதகு அமைக்கும் பணி. (கோப்புப் படம்)
கும்மிடிப்பூண்டிஅருகே கண்ணன்கோட்டை - தேர்வாய் புதிய நீர்த்தேக்கப் பணிகளுக்காக ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் நடைபெற்றுவரும் மதகு அமைக்கும் பணி. (கோப்புப் படம்)


சென்னை அருகே கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கப் பணிகள் மூன்று மாதங்களில் நிறைவடையும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக முதல்வர் பழனிசாமி பேசியது:
கடலூர்-நாகப்பட்டினம் மாவட்டம் ஆதனூர்-குராமங்கலம் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய தலை மதகுகளுடன் கூடிய கதவணை ரூ.428 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடியில் புதிய கதவணை கட்டும் பணியும் நடந்து வருகிறது. அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் ரூ.1,652 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய நீர்த்தேக்கம்: சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்த் தேக்கத்தை அமைப்பதற்கான பணிகளில் இதுவரை 95 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடிக்கப்படும்.
ஆறுகள் இணைப்புத் திட்டம்: தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்ணையாறு-செய்யாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு)-பாலாறு இணைப்பு, காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு-அய்யாறு இணைப்பு, காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆறுகளை இணைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அரசுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டார். 
5-ஆவது நீர்த்தேக்கம்:  சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன.  ஆனால், மக்கள்தொகை 
அதிகரித்துவரும் நிலையில் நகரின் குடிநீர்த் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவது நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கி பணி நடைபெற்று வருகிறது. 
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ரூ. 330 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்றும் இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படும் என்றும்  கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து, தெலுங்கு- கங்கை திட்டத்தின் மூலம் சென்னைக்கு தண்ணீர் வரும் போது, பூண்டி மற்றும் இதர நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தது போக உபரியாக நீர் இருக்கும் நிலையில் அதை சேமித்து வைக்கவும் இந்தப் புதிய நீர்த்தேக்கம் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com