சென்னை

சென்னையில் புதிதாக 2 ஆயிரம் மழைநீர் சேமிப்புக் கிணறுகள் அமைக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்

31st Jul 2019 04:23 AM

ADVERTISEMENT


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக 2 ஆயிரம் மழைநீர் சேகரிப்புக் கிணறுகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைப் புனரமைத்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திடக்கழிவுகளைக் கையாளுதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளை பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்பு நிதியில் மேற்கொள்ளுவது தொடர்பாக  அந்நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  அம்மா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு  தலைமை வகித்த ஆணையர் ஜி.பிரகாஷ் பேசியது: சென்னை மாநகரில் பராமரிப்பு இல்லாமல் இருந்த 210 நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு நிதி மூலம் பணிகள் மேற்கொள்வது மட்டுமின்றி பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி, தொண்டு 
நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புச் சங்கங்களின் உதவியுடன் 48 நீர்நிலைகளைப் புனரமைக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 16 நீர்நிலைகளில் புரனமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும்,  90 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிக்கான இறுதி அறிக்கை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் மூலமாக தயார் செய்யப்பட்டுள்ளது.  இந்த நீர்நிலைகளின் 
புனரமைப்புப் பணிகளை பெருநிறுவனங்கள் தங்களது சமூகப் பங்களிப்பு நிதியில் மேற்கொள்ள முன்வர வேண்டும். சென்னை மாநகராட்சி சார்பில் 9,448 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதில், 2014-2015-ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு பணி மற்றும் மூலதன நிதியின்கீழ் மழைநீர் வடிகால் பணிகளில் 1,437 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மழைநீர் வடிகால் துறை மூலம் கடந்த 2016-17-ஆம் ஆண்டு உலக வங்கி நிதியின் கீழ் 208 இடங்களில் மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகள் மற்றும் 7,072 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக 2,000 மழைநீர் சேகரிப்புக் கிணறுகள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, இணை ஆணையர் ஆர். லலிதா, 80 பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT